×

27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை பிடிப்பது யார்? திமுக, அதிமுகவுக்கு சமவாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை யார் பிடிப்பார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி திமுக, அதிமுகவுக்கு சமவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த இரண்டு நாட்களாக எண்ணப்பட்டன. நேற்று இரவு வரை வாக்கு எண்ணிக்கை நீடித்தது. ஆனாலும், சில இடங்களில் முடிவுகள் அறிவிக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மொத்தம் உள்ள 27 மாவட்ட ஊராட்சிகளில் திமுக 13 மாவட்ட ஊராட்சிகளையும், அதிமுக 13 மாவட்ட ஊராட்சிகளையும் கைப்பற்றும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் மட்டும் அதிமுக, திமுக சார்பில் தலா 8 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளதால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை திமுக கைப்பற்ற வாய்ப்புள்ளது. சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கரூர், கடலூர், அரியலூர், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்ற வாய்ப்புள்ளது. அதேநேரம் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 5,067 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2,330 இடங்களையும், அதிமுக கூட்டணி 2,165 இடங்களையும், மற்றவை 536 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மேலும், மொத்தமுள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 267 இடங்களிலும், அதிமுக கூட்டணி 243 இடங்களில் மற்றவை 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இன்னும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

Tags : District Panchayath Chairman ,AIADMK ,DMK , positions of 27 District Panchayath Chairman, DMK, Opportunity for AIADMK
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி